பள்ளி கைப்பிடி சுவர் இடிந்து மாணவன் பலி... பெற்றோர், உறவினர்கள் போராட்டம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அரசு பள்ளியின் சுவர் சரிந்து உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். 
 
திருத்தணி ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரது மூத்த மகனான மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். உணவு இடைவேளையின் போது உணவு வாங்கிக்கொண்டு அருகே இருந்த சுவர் மீது அமர்ந்து உணவருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மாணவன் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவன் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து புகார் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில், மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் தியாகராஜன், வட்டாரகல்வி அலுவலர் அமுதா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் மீது பி.என்.எஸ் 106 பிரிவின் கீழ் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மாணவனின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியும், அரசு வேலை வழங்கினால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என்று மாணவனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 


Night
Day