பட்டாவுக்காக பட்டியலின இன மக்கள் பல தலைமுறைகளாக போராட்டம்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகர்கோவில் அருகே 5 தலைமுறைகளுக்கு மேலாக பட்டா கோரி பட்டியலின இன மக்கள் போராடி வருகின்றனர். ஏன் இந்த போராட்டம்? மன்னர்கள் வழங்கிய பட்டாவை, அரசு வழங்க மறுப்பதால் அவதிக்குள்ளாகும் மக்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடசேரி பகுதியில் பட்டியலின இன மக்கள் பல தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த சூழலில் தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா கேட்டு, அப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக போராடி வரும் அவலநிலை நீடித்து வருகிறது. 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் பயனளிக்காததால், வீட்டுமனை பட்டா கோரி கடந்த இரண்டு வருடங்களாக  பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய அப்பகுதி பெண்கள், தங்களின் அடுத்த சந்ததியினர் வேதனைக்குள்ளாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

சிறுமிகள் மற்றும் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், 100 ஆண்டுகளை கடந்து ஒரே பகுதியில் வசித்துவரும் தங்களுக்கு திருவிதாங்கூர் மன்னர் அளித்த பட்டாவிற்கான சான்றுகளை சமர்பித்தும், அரசு தங்களுக்கு பட்டா வழங்க மறுப்பது ஏன்? எனவும் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 

5 தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் பலவும் செய்து தரப்படவில்லை எனவும், கழிவுநீர் செல்லும் ஓடையை சீர்படுத்தி வாழ வழிவகை செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு வீட்டுமனை பட்டா வழங்க முன்வர வேண்டுமெனவும், இல்லையெனில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

தங்களது சர்வே எண்ணில் தங்களுக்கு அளிக்க முடியாத பட்டாக்களை, வேறு இடத்தை சேர்ந்த 3 பேருக்கு வழங்கியது எப்படி? எனவும், அது சாத்தியமாகும் பட்சத்தில் அதனடிப்படையில் தங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

உரிய ஆவணங்கள் இருந்தும், இருப்பிடத்திற்கான பட்டா கேட்டு போராடி வரும் மக்களின் வேதனை குரல் அரசின் செவிகளுக்கு எப்போது எட்டும் என்பேதே கேள்வியாக இருந்து வருகிறது. 

varient
Night
Day