எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு கத்தார் சென்றடைந்தார். இரு நாள் பயணமாக அமீரகம் சென்ற பிரதமர் மோடி நேற்று அபுதாபியில் பிரமாண்ட சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைத்தார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் கத்தார் புறப்பட்டுச் சென்றார். தோஹா விமான நிலையத்தில் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சோல்தான் பின் சாத் அல்-முரைக்கி அவரை வரவேற்றார். இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியை பிரதமர் மோடி சந்திக்கிறார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர். அண்மையில் கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 8 இந்தியர்கள் மத்திய அரசின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் பிரதமர் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.