எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஒடிசாவில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்த பிரதமர் மோடி, உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட 97 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைத்தொடர்பு, ரயில்வே, உயர்கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் கிராமப்புற வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் துவங்கியும் வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக தேசிய தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, பிஎஸ்என்எல் சார்பில் அமைக்கப்பட்டது உள்பட 97 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மொபைல் 4ஜி கோபுரங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன் முலம் தொலைதூர, எல்லைப்புற மற்றும் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 26 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட இணைக்கப்படாத கிராமங்கள் செல்போன் இணைப்பு பெறும்.
மேலும் 8 ஐஐடிகளின் விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பெர்ஹாம்பூர் மற்றும் சூரத்தில் உள்ள உத்னா இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் 8 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்து வந்த ஒடிசா, தற்போது வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாக கூறினார். ஒடிசாவில் 2 குறைகடத்தி தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தெரிவித்த அவர், ஒரு குறைக்கடத்தி பூங்காவும் விரைவில் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற விரும்பும் எந்தவொரு நாடும் கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்துவதாக கூறிய பிரதமர் மோடி, கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிக்க, 70 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டிற்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்றும் கூறினார்.
தொலைத்தொடர்புத் துறையின் முக்கியமான தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், அந்த வகையில் பிஎஸ்என்எல் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.