எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் 4வது நாளாக இன்றும் முடங்கின.

நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடரின் 4ம் நாளான இன்று மக்களவை காலையில் கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை தொடர ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக நண்பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து, மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சி எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் நண்பகல் 12 மணிக்கும், பின்னர் பிற்பகல் 2 மணிக்கும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க் கட்சிகளின் அமளி தொடர்ந்ததை அடுத்து அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 4வது நாளாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்திய அவர்கள்,  தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயத்தின் மீதான தாக்குதல் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.


Night
Day