உத்தரகாண்ட் - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள் - பதைபதைக்கும் காட்சிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்துச்செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாசி மாவட்டத்தின் தாராலி கிராமத்தில் திடீரென மேகவெடிப்பு நிகழ்ந்ததாக தெரிகிறது. இதனால், கீர் கங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் தாராலி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. அப்போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மண்ணுக்குள் புதைந்துள்ள மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகளுக்கு மேல் வண்டல் மண் படிந்துள்ளதால் மீட்கும் பணி கடினமாக உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50 பேர் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தாராலியில் நிகழ்ந்த மேக வெடிப்பு சம்பவம் வருத்தளிப்பதாக கூறி உள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

Night
Day