எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காம் தாக்குதல் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் ஜகதீப் தன்கர் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். தொடர்ந்து 12 மணிக்கு, மீண்டும் அவை கூடிய போது, பஹல்காம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக அவையில் பேசிய மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஹல்காம் தாக்குதல் குறித்தும், போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்துகள் குறித்தும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், போர் நிறுத்தம் பற்றிய டிரம்ப்பின் கருத்துகள் நாட்டை அவமானப்படுத்துதாகவும், அவர் ஒருமுறை அல்ல, சுமார் 24 முறை இதே கருத்தை கூறியிருப்பதாக குறிப்பிட்ட கார்கே, இதுகுறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.