எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மழைக்கால கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற கூட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் புத்துணர்ச்சியுடன் மழை கால கூட்டத் தொடரை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்த மழைக்கால கூட்டத்தொடர் வெற்றியின் கொண்டாட்டம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, விண்வெளியில் இந்தியா புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். விண்வெளிக்கு சென்று சுபான்ஷு சுக்லா புதிய வரலாறு படைத்துள்ளார் என்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் என்றும் அவர் தெரிவித்தார். ஆபேரேசன் சிந்தூர் மூலம் ஒட்டு மொத்த உலகமும் இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டது என்றும் ஆபரேசன் சிந்தூரில் இந்திய ராணுவம் நிர்ணயித்த இலக்குகள் 100 சதவீதம் எட்டப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டில் நக்சல்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, உலகின் 3வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார். நாட்டின் பணவீக்க விகிதம் இரண்டு சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், 25 கோடி ஏழை மக்கள் வறுமையில் இருந்து மீண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.