எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு காஷ்மீரின் அமைதியையும் முன்னேற்றத்தையும் சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிப்பதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதைத் திட்டம் வெறும் பெயர் அல்ல, அது இந்தியாவின் புதிய சக்தியின் பிரகடனம் என்றார். ஜம்மு-காஷ்மீரின் லட்சக்கணக்கான மக்களின் நூற்றாண்டு காலக் கனவு இன்று நிறைவேறியுள்ளதாகவும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார். இன்றைய நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மன உறுதியின் ஒரு பெரிய கொண்டாட்டம் எனக் குறிப்பிட்ட பிரதமர், மாதா வைஷ்ணோதேவியின் ஆசியுடன், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான சமீபத்திய தாக்குதல் போன்றவை ஜம்மு-காஷ்மீரின் செழிப்பை அழிக்கும் நோக்கம் கொண்டவை எனக் கூறிய அவர், ஆனால் அவை யாவும் காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்காது என உறுதிபடத் தெரிவித்தார். பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இந்தப் பிராந்தியத்தின் மனிதகுலத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல என்றும் கலவரங்களைத் தூண்டி இந்தியாவில் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகளின் மூலோபாய நடவடிக்கை என்றும் பிரதமர் குற்றம் சாட்டினார்.
பயங்கரவாதத்திலிருந்து ஜம்மு-காஷ்மீரை விடுவிப்பது முக்கியம் என்றும் அதனை மத்திய அரசு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இப்போது, இளைஞர்கள் ஒரு வளமான மாநிலத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக கூறிய அவர், ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்தைத் தடுக்க எதையும் அனுமதிக்க மாட்டேன் என்றார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் வலுவான செய்தியை வழங்கியுள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்க மாநில இளைஞர்கள் முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.