"ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் முப்படைகளும் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. சிந்துநதி நீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து, இறக்குமதிக்கு தடை, பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. ராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இது தொடர்பாக முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புதுறை மற்றும் உள்துறை செயலாளர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடம் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். 

இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் நாடு முழுவதும் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆப்ரேசன் சிந்தூர் என்று பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பஹவல்பூர், முரிட்கே, டெஹ்ரா கலான், சியால்கோட், பிம்பர், கோட்லி, மஸ்கார் ரஹீல் சாஹித், முசாபராபாத், மர்காஸ் சையத்னா பிலால் ஆகிய 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, முப்படையும் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 23 நிமிடங்கள் 24 ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்தார்.

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் ஆகும். இதுதவிர ஹிஜ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளின் பயிற்சி முகாம்களை குறிவைத்தும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் புல்வாமா தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முகாம் தகர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை பிரதமர் மோடி இரவு முழுவதும் கண்காணித்துள்ளார். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவி வருகிறது. 

ரபெல் போர் விமானங்கள் மூலம் ஸ்கால்ப் ஏவுகணைகள், வானிலிருந்து தரையில் துல்லியமாக தாக்குதல் நடத்தும் ஹேம்மர் குண்டுகளும் ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷன் சிந்தூர் என்றும் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பதற்றம் நிலவும் நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து வடமாநிலங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தரம்சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன. பதான்கோட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 72 மணி நேரம் மூடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தநிலையில், ஜம்முகாஷ்மீர் மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்திய ராணுவம் ஜிந்தாபாத், பாரத் மாதா கி ஜெய் என பொதுமக்கள் முழக்கமிட்டனர்.  பல இடங்கிளில் தேசிய கொடியுடன் நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதனிடையே ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்தன. பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

  

varient
Night
Day