எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் புராட்டாசி மாதத்தையொட்டி ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குவிந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதையடுத்து புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி, பூலோகத்தின் வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிறமாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் காலையிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பாளையங்கோட்டையில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். காந்தி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நரசிம்மர் சிலைக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன் நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பூத நாராயண பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூத நாராயண பெருமாளை வழிபட்டனர்.
திருச்செந்தூர் வன திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழைமையையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு கோ பூஜையும், விஸ்பரூப தரிசனமும் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு திருமஞ்சனமும், சகஸ்ர நாம அர்ச்சனையும் , திருவாராதனம் சாற்று முறை பூஜைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை மனமுருகி வழிபாடு செய்தனர்.