பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில், லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி,  மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரையில் எழுந்தருளி வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றியும், தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் வரவேற்றனர்.

லட்சக்கணக்காண பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் விண்ணை பிளக்க, தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர், தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள் மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து தேனூர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க உள்ளார். 



varient
Night
Day