உளுந்தூர்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் உற்சாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புகழ்பெற்ற உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற தேரோட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநங்கைகள் கொண்டாடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றம் மற்றும் சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழாவில், நேற்று திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வும், அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் அரவான் சிரசுக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கீரிமேடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஜம், மார்பும், நத்தம் கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கை, கால்களை, சிவிலியன்குளம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 21 அடி உயர தேரில் பொருத்தினர்.

தொடர்ந்து அரவான் சிரசு கோயிலை சுற்றி வலம் வந்து தேரில் பொருத்தப்பட்ட நிலையில்,  மகா  தீபாராதனையுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

அப்போது கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லரைக் காசுகளையும் சுவாமி மீது வீசி வழிபட்டனர். தேர் செல்லும் பாதையில் திருநங்கைகள் சூரத்தேங்காய்களை உடைத்து கற்பூரம் ஏற்றி கும்மியடித்து வழிபட்டனர். தேரோட்ட திருவிழாவையொட்டி, எஸ்.பி. சமய்சிங் மீனா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அரவானை கணவனாக ஏற்றுக் கொண்டு பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள், தாங்கள் அணிந்திருந்த தாலியை துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது. நெற்றியில் உள்ள பொட்டை அழித்து வளையல்களை உடைத்து திருநங்கைகள் தாலியைத் துறந்தனர். இதனையடுத்து அங்குள்ள கிணற்றில் நீராடியபின் வெள்ளை புடவை அணிந்து விதவை கோலத்தில் திருநங்கைகள் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர். 

varient
Night
Day