எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று சுவாமிகள் அதிகாலையில் கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளி நான்கு வீதிகளில் வலம் வந்தனர்.
பின்னர் நறுமணமிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ண பூக்களாலும், நவதானியங்களாலும் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில், மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் தனி தனியாக எழுந்தருளினர்.
இதனையடுத்து மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்புகட்டும் வைபவம் நடைபெற்றது. தொடர்ச்சியாக சுந்தரேஸ்வரருக்கு பட்டு பீதாம்பரமும், அம்மனுக்கு பட்டுச்சேலையும் சாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தனது தங்கையான மீனாட்சியம்மனை பவளகனிவாய் பெருமாள் தாரைவார்த்து கொடுத்ததையடுத்து, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு, மங்கல வாத்தியங்கள் வாசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மிதுன லக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தாலான மங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அப்போது கோயிலில் கூடியிருந்த பெண் பக்தர்கள் தங்களது தாலி கயிற்றை புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து தங்கத்தால் ஆன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தன கும்பா மற்றும் பன்னீர் தெளிப்பு கும்பா மூலமாக பன்னீர் தெளிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தையடுத்து பக்தர்களுக்கு தாலிக்கயிறும், குங்குமமும் வழங்கப்பட்டது.
இதனிடையே மீனாட்சி - சுந்தரேஸ்வரரை பார்ப்பது புண்ணியம் எனவும், அதிலும் திருக்கல்யாணத்தை பார்ப்பது மிக புண்ணியம் என பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.