ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் வீட்டில் ஆபாசமாக நடனமாடும் வீடியோ வெளியாகியதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்களுடன் சேர்ந்து மதுபோதையில் பருத்திவீரன் பட பாடலுக்கு வீட்டில் நடனமாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஓர் அர்ச்சகர் ஆபாசமாக நடனமாடியது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபூதியை அடித்து பெண்களிடம் விளையாடுவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி பக்தர்களிடையே முகம் சுழிக்க வைக்கிறது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களை கும்பாபிஷேக பணியிலிருந்து நீக்கி, வேறொரு புதிய குழுவை நியமித்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவ தொடர்பாக அர்ச்சகர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இதனிடையே ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் கோமதி விநாயகம், கணேசன், வினோத் ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அர்ச்சகர்கள் ஆபாச  நடனமாடிய காட்சிகள் வைரலானதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Night
Day