ஆடிக் கிருத்திகை - தமிழகத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆடி கிருத்திகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, காலை முதலே பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கோயிலுக்குள் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கடலில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் பொது தரிசன வரிசை மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் முதியோர்கள் செல்லும் வரிசை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆடி கிருத்திகை மற்றும் வார விடுமுறையையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். மலையடிவார பாத விநாயகர் கோவில், வின்ச் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.  சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் யானை பாதை வழியாக கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் கிரிவலம் பாதையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆடி கிருத்திகையையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். உற்சவர் ஆறுமுக கடவுளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆடிகிருத்திகையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளுர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மலைக்கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மலையடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் ஆடி கிருத்தியையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு மேற்கொண்டனர். முருகனுக்கு உகந்த நாள் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


varient
Night
Day