எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்கா, ஜெர்மன், மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் வரவேற்பை பெற்று வரும் தேனி உலர் பழ மற்றும் உலர் பருப்பு மாலையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
மலர் மற்றும் உலர் பழம், ஏலக்காயை பயன்படுத்தி, ஓய்வுபெற்ற ஆசிரியையை, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் என குடும்பமே மாலை தொடுத்து அசத்தி வரும் காட்சிகள்தான் இவை...
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஞானகுருதாஸ் என்பவர் குடும்பத்தினருடன் இணைந்து ஆப்ரிகாட் கிவி, அத்தி, அன்னாச்சி, மாம்பழம், செர்ரி போன்ற உலர் பழங்களிலும், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உலர் பருப்புகளிலும், கிராம்பு, ஏலக்காய், வெல்லம், சாக்லேட், கற்கண்டு, இஞ்சி போன்ற பல்வேறு உணவு பொருட்களிலும், மாலை உற்பத்தி செய்து அசத்தி வருகின்றனர்.
தனிதனியாகவும், எல்லா பொருட்கள் கலந்த கண்ணை கவரும் வகையில் உருவாகும் இவர்களது மாலையில் அனுமதியுடன் தேசிய பறவையான மயில் இறகும் இடம் பெற்றுள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட மாலைகள், திருப்பதி வெங்கடாஜலபதி சிலையையும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சிலையையும், இராஜபாளையம் மாப்பிளை விநாயகர் சிலையையும் அலங்கரித்து வருவது குறிப்பிடதக்கது.
உள்ளூர் திருமண விசேஷங்களின்றி, வெளி மாநிலங்களுக்கும், ஆஸ்திரேலியா, இலங்கை, ஜெர்மன் என பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள். மலர்களை மாலையாக கோர்ப்பது போல் இவர்களது தயாரிப்பு இருந்தாலும் பாதாம் பிஸ்தா பருப்புகளை துளையிட்டு ஊசியில் கோர்த்து மாலையாக மாற்றுவதும், கிராம்புகள் உடையாமல் உருவாக்குவது அதிக சிரமமும், அதிக நேரமும் எடுப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலில் ஏலக்காயில் தொடங்கி தற்போது உலர் பழங்களை கொண்டு மாலைகளை செய்து வருவதாகவும், நிகழ்ச்சிக்கு பின் இந்த மாலைகளை பிரசாதமாக மீண்டும் பயன்பெறுவதால் இதற்கு மவுசு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கிறார் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஞானகுருதாஸ்.
சுற்றளவு உயரம் என மாலையின் அளவை கணித்து விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், ஏலக்காய் கொண்டு உருவாக்கப்படும் மாலையை 200 ரூபாய்க்கு கொடுப்பதாக சிவரஞ்சனி தெரிவிக்கிறார். விதவிதமான வண்ண மலர்கள் கொண்டு உருவாக்கப்படும் மாலைகள் மட்டுமில்லாமல், தனித்துவமாக தயாரிக்கப்படும் இந்த மாலைகள் வெகுவாக கவர்கிறது.