எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாட்டையே பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்படி என்ன தான் நடந்தது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அடுத்த வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் வெளிநாட்டில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சோபிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் வீட்டிற்கு எதிர் வீட்டில் கடந்த நான்கு வருடங்களாக ராபர்ட் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் வசித்து வருகிறார். வீட்டின் முன்பகுதியிலேயே கடை ஒன்றையும் ராபர்ட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது எதிர்வீட்டில் குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் சோபிதாவிற்கு ராபர்ட் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். சோபிதா வெளியே சென்று வரும்போதெல்லாம் அவரை தடுத்து நிறுத்தி ராபர்ட் ஆபாசமாக பேசுவது, சைகை காட்டுவது என்று தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து சோபிதா பலமுறை கண்டித்தும் அவர் கேட்காமல் தொந்தரவு செய்வதை தனது வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை பொறுக்க முடியாத சோபிதா அக்கம் பக்கத்தினர் மற்றும் ராபர்ட்டின் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனாலும் ராபர்ட் கேட்காமல் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் வீட்டில் தனியாக இருக்க பயந்த சோபிதா வெளிநாட்டில் இருக்கும் தனது கணவரிடம் ராபர்ட்டின் லீலைகள் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பினார் லாரன்ஸ். தனது மனைவி கூறிய பாலியல் தொந்தரவு குறித்து ராபர்ட்டிடம் கேட்டுள்ளார் லாரன்ஸ். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை முன்விரோதமாக எடுத்துக்கொண்ட ராபர்ட், வெளியே செல்வதற்காக வீட்டிலிருந்து வந்த லாரன்ஸை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் லாரன்ஸை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரது உதட்டையும் கடித்துள்ளார் ராபர்ட். இதனை தடுக்கவந்த சோபிதாவையும் தாக்கிவிட்டு, அங்கிருந்து ராபர்ட் தப்பியோடியுள்ளார். தொடர்ந்து படுகாயமடைந்த லாரன்ஸை உறவினர்கள் மீட்டு புதுக்கடை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தப்பியோடி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராபர்ட்டை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.