எழுத்தின் அளவு: அ+ அ- அ
வங்கிகளில் பெறப்பட்ட தங்க நகைக் கடன் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டித் தொகையை மட்டும் செலுத்தி மறுஅடகு வைக்கப்பட்டு வந்தநிலையில் அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது மேலும் 9 கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ விதித்துள்ளநிலையில் அவை என்ன? பாதிப்புகள் என்ன? பார்க்கலாம் விரிவாக..!
பொதுவாக இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்க தான் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் செயல்படும். அந்த வகையில் தற்போது தனி நபர்களுக்கு தங்க நகைக்கடன் வழங்குவதற்கு ஆர்பிஐ சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் பின்பற்றியாக வேண்டும்.
2020 கொரோனா காலத்தில் மக்கள் பணமில்லாமல் தவித்ததைக் கண்ட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நகைக்கடன்களில் தாராளம் காட்டின. நகைக்கடன்கள் வழங்கிட நிதி நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கியதுடன், வழக்கமான 75% கடன் விகிதத்தை 80% ஆக மாற்ற அனுமதி வழங்கின. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைக்கு அதில் 75 சதவீத தொகையான 35 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டு வந்தநிலையில் கொரோனா காலத்தில் அதனை 80 சதவீத தொகை அதாவது 40 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. இது தற்போது ஆர்.பி.ஐ-ன் புதிய வழிகாட்டுதலுக்கு இணங்க மீண்டும் 75 சதவீதமாகவே குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 22 காரட் அல்லது அதற்கு மேற்பட்ட PURITY கொண்ட தங்க நகைகளுக்கு மட்டுமே இனி வங்கிகளில் கடன் வழங்கப்படும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. இதில் வங்கிகள் அல்லாத பிற நிறுவனங்களால் விற்கப்படும் நாணயங்கள் கடனுக்கான தகுதியான நாணயங்களாகக் கருதப்பட மாட்டாது எனவும் தெளிவாக கூறியிருக்கிறது ஆர்.பி.ஐ. 925 PURITY கொண்ட வெள்ளி நகைகள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வங்கிகளால் விற்கப்படும் குறிப்பிட்ட வெள்ளி நாணயங்களையும் வங்கிகளில் அடமானமாக வைத்து கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் பார் வெள்ளி, வெள்ளி ETFகள் போன்ற நிதி சொத்துக்கள் பிணையாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அடமானம் வைக்கும் தங்க நகை, தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர்கள் தங்க நகையை அடமானம் வைக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை தங்கத்தை வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இல்லாதபட்சத்தில், கடனாளியிடமிருந்து தகுதியான வேறு ஆவணங்களோ, அல்லது நகை மீதான தங்களின் உரிமையை தெளிவாக தீர்மானிக்கக்கூடிய அறிவிப்பு பெறப்பட வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது ஆர்.பி.ஐ.
மேலும் அடமானமாக வைக்கப்படும் தங்க நகையின் தரம் குறித்தான சான்றிதழ்களை கடன் கொடுக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதோடு அந்த தரச்சான்றிதழில் கடன் கொடுப்பவர், கடன் வாங்குபவர் என இருவரது கையொப்பமும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆர்.பி.ஐ.
இதில் தங்க நகைக்கடனுக்கான உச்ச வரம்பையும் ஆர்.பி.ஐ விதித்துள்ளது. அதன்படி அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதுவே தங்க நாணயங்கள் என்று வரும் போது, அடமானம் வைக்கப்படும் நாணயங்களின் மொத்த எடை 50 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிணையாக எடுக்கப்பட்ட தங்கத்தின் முழு விளக்கம், அதன் மதிப்பு, ஏல நடைமுறையின் விவரங்கள், தங்கத்தை ஏலம் விடுவதற்கான வரன்முறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கடன் ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் அதே நேரம் நகைக்கடன் திருப்பி செலுத்தப்பட்ட 7 நாட்களுக்குள் அடகு வைக்கப்பட்ட நகைகளை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000-த்தை வங்கி தரப்பில் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும் எனவும் விதிகளை வகுத்துள்ளது ஆர்.பி.ஐ.