எழுத்தின் அளவு: அ+ அ- அ
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற துடித்த விளம்பர திமுக அரசுக்கு உயர்நீதிமன்ற காட்டமாக கேள்விகள் மூலம் குட்டு வைத்துள்ளது. நீதிபதிகள் கண்டனம் தெரிவிக்க காரணம் என்ன? வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற விளம்பர திமுக துடியாய் துடித்தது ஏன்?-விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..!
கடந்த மாத தொடக்கத்தில் தமிழக டாஸ்மாக் தலைமையகத்தை சல்லி சல்லியாக சளித்து அதிரடி ரெய்டு நடத்தியது அமலாக்கத்துறை. அதேபோல தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் என்ற மதுபான ஆலை உள்பட பாட்டிலிங் நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் டாஸ்மாக் தலைமையகத்தில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்களை அள்ளிச்சென்ற அமலாக்கத்துறை, ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்ட கையோடு, டாஸ்மக்கின் உச்சபட்ச அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராக சொல்லி அனுப்பிய சம்மன் திமுக மேலிடத்தையே ஆட்டம் காண வைத்தது.
இதையடுத்து டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது டாஸ்மாக் நிறுவனம். இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அடங்கி அமர்வு விசாரித்த நிலையில் வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய டாஸ்மாக்குக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் தலைமையகத்தில் மேற்கொண்டு சோதனை நடத்த வேண்டாம் எனவும் அமலாக்கத்துறைக்கு வாய்மொழியாக உத்தரவிட்டனர்.
ஆனால் கடந்த மார்ச் 25ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தனர் நீதிபதிகள். எந்தவித காரணத்தையும் கூறாமல் நீதிபதிகள் வழக்கில் இருந்து விலகியது ஏன்? என்ற கேள்வி அப்போதே எழுந்தது.
வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு, டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் தான் டாஸ்மாக் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் யாரை காப்பாற்ற உச்சநீதிமன்றம் போனீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளால் திமுக அரசை திணறடித்துள்ளனர் நீதிபதிகள். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தின் கதவை திமுக தட்டியதன் பின்னணியில் தேர்தல் கணக்கே இருப்பதாக விவரமறிந்தவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அதாவது ஏற்கெனவே பணமோசடி புகாரில் அமலாக்கத்துறையிடம் சிக்கி சின்னாபின்னமாகிக்கிடக்கிறார் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி. இது தொடர்பான வழக்கில் அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என ஏற்கெனவே செக் வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
அதுமட்டுமின்றி டாஸ்மாக்கில் மதுபானங்கள் 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது முதல் டாஸ்மாக்கின் கணக்கிலேயே வரமால் நேரடியாக கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் DUPLICATE மதுபானம் முதற்கொண்டு பார் டெண்டர், டிரான்ஸ்போர்ட் டெண்டர் வரை டாஸ்மாக் மூலம் வரும் பல கோடி அளவிலான முறைகேடு பணம் அத்தைனையும் செந்தில் பாலாஜி மூலம் விளம்பர திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்த கல்லா பெட்டிகளையே நிரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படி இருக்கையில் டாஸ்மாக் அதிகாரிகளை அமலாக்கத்துறை கவனிக்கிற விதத்தில் கவனித்தால் செந்தில் பாலாஜி மட்டுமல்ல திமுகவின் முதலமைச்சரே சிறை செல்லும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அதுவும் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மாநிலத்திற்குள் வழக்கு விசாரணை நடந்தால் அது நாளுக்கு நாள் தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்து சட்டமன்ற தேர்தலில் அது பெரும் பின்னடையை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
இதன்காரணமாக வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றினால் விசாரணையை கால தாமதம் செய்வதோடு, வழக்கையே நீர்த்துப்போக செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்றும் வழக்கு வேறு மாநிலத்தில் நடந்தால் அது தொடர்பான செய்திகள் தமிழக அரசியல் களத்தை பாதிக்காது என்பது தான் திமுகவின் கணக்காக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் உச்சநீதிமன்றமோ திமுகவின் கணக்கை மாற்றி எழுதியுள்ளது. டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற விசாரணையில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது, விளம்பர திமுக அரசுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.