எழுத்தின் அளவு: அ+ அ- அ
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமைச்சர் மதிவேந்தன் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் சொல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திமுக அரசு மக்களுக்கானது அல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கும் இந்த புகார் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் ஏராளமான நூற்பாலைகள், விசைத்தறி மற்றும் சாய ஆலைகள் இயங்கி வருகின்றது. இவற்றை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், சாய ஆலைகளால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது தீரா அவலமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் குமாரபாளையம் அடுத்த குளத்துக்காடு பகுதியில் ஒன்பது சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. இவை அனைத்தும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக சாக்கடைகள் வழியாக காவிரி ஆற்றில் கலந்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் சாயக்கழிவுகள் நீரோடி பகுதியில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள், சாயத் தண்ணீரை குடித்தே சாவதுதான் எங்கள் தலையெழுத்தா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை சந்தித்து 500-க்கும் மேற்பட்ட மனுக்க கொடுத்திருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும், தேர்தல் வருவதையொட்டி சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமைச்சர் மதிவேந்தன் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். திமுக அரசு சாமானிய மக்களுக்காகவா அல்லது சாய ஆலை முதலாளிகளுக்காகவா என்றும் அவர்கள் வேதனையுடன் கேட்கின்றனர்.
இதனிடையே கண்துடைப்புக்காக சில சாய ஆலைகளின் மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்தாலும் ஜெனரேட்டர் மூலம் ஆலைகள் இயங்கி வருவதுடன், சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரும் வெளியேற்றப்படுவதும் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் கொங்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.