எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தாக்கிய 9 இடங்கள் என்னென்ன..? பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன? அதன் சிறப்புகள் என்ன? விரிவாக பார்ப்போம்...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்களை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.
இரவு சுமார் 1:44 மணி அளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது வரலாற்று சிறப்புமிக்க முப்படைகளின் துல்லியமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களை பிரதமர் மோடி இரவு முழுவதும் நேரடியாக கண்காணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் இந்திய விமானப்படை தனது அதிநவீன ராஃபேல் போர் விமானங்களைப் பயன்படுத்திய நிலையில் SCALP குரூஸ் ஏவுகணை, HAMMER என்று சொல்லக்கூடிய துல்லிய குண்டு மற்றும் "காமிகேஸ் ட்ரோன்கள்" ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்கால்ப் ஏவுகணை என்பது பிரான்ஸ் தயாரித்த வான்வழி ஏவுகணை. இது ஸ்டார்ம் ஷேடோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணையின் நீளம் 5.1 மீட்டர் மற்றும் விட்டம் 630 மிமீ. ஏவுகணையின் எடை 1300 கிலோகிராம் மற்றும் தாக்கும் தூரம் 250-400 கிமீ. ஸ்கால்ப் ஏவுகணை 400 கிலோ வெடிபொருட்களைக் சுமந்து செல்லக்கூடியது. இது இன்டெர்ஷியல் நேவிகேஷன், GPS மற்றும் டெரெய்ன் ரெஃபரன்ஸ் நேவிகேஷன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வழிநடத்தப்படுகிறது. இதில் இமேஜிங் இன்ஃப்ராரெட் சீக்கர் மற்றும் இலக்கைத் தானே அடையாளம் காணும் திறன் உள்ளது. இதனால் இது தனது இலக்கைத் துல்லியமாகத் தாக்குகிறது. தீவிரவாதிகளின் இலக்குகளை மிக துல்லியமாக குறி வைத்து தாக்க வேண்டும் என்பதாலேயே ஸ்கால்ப் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தீவிரவாதிகளின் பயிற்சி மற்றும் தளவாட மையங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வலுவூட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் பல மாடிகள் கொண்ட கட்டிடங்கள், மற்றும் கடினமாக உள்கட்டமைப்புகளை தகர்க்க வேண்டியிருந்ததாலேயே HAMMER என்று சொல்லக்கூடிய துல்லிய குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. HAMMER என்பது ஏவுதள உயரத்தைப் பொறுத்து 50-70 கிலோமீட்டர் வரம்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு துல்லியமான வழிகாட்டப்பட்ட, ஸ்டாண்ட்ஆஃப் குண்டு என்பது குறிப்பிடதக்கது.
இது இல்லாமல் "காமிகேஸ் ட்ரோன்கள்" என்றும் அழைக்கப்படும், இலக்கை சுற்றித்திரிந்து கண்டறிந்து துல்லியமாக தாக்கக்கூடிய வல்லமை பெற்ற ஆயுதங்களும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் அமைப்புகள் இலக்குப் பகுதிகளுக்கு மேல் பறந்து, தன்னியக்கமாகவோ அல்லது ரிமோட் கண்ட்ரோலின் கீழ் இலக்கை கண்டறியும் திறன் பெற்றுள்ளது. பதிலடியின் போது தீவிரவாதிகளில் இலக்கை துல்லியமாக கண்டறிய வேண்டி இருந்ததாலேயே இந்த தாக்குதலுக்கு "காமிகேஸ் ட்ரோன்கள்" பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பதிலடியில் தீவிரவாதிகளின் 9 தளங்கள் தகர்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் நான்கு பாகிஸ்தானின் பிரதான நிலப்பகுதியில் அமைந்துள்ளன மற்றும் ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ளன. அதன்படி, தடை செய்யப்பட்ட ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு செயல்படும் பஹவல்பூர், முஷாராபாத் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெஹ்ரா காலன், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சியால்கோட் பகுதிகளிலும் இந்திய படை தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் தலைமையகம் உள்ள முரிட்கேயில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபராபாத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ தளங்களோ அல்லது பொதுமக்களின் வாழ்விடங்களோ குறி வைக்கப்படவில்லை என்றும் முழுக்க முழுக்க தீவிரவாத அமைப்புகளின் கூடங்கள், பயிற்சி பட்டறைகள், தலைமையகங்களே குறி வைக்கப்பட்டு தகர்த்தெறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வான்வழியாக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு கடற்படையும் தரைப்படையும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.