எழுத்தின் அளவு: அ+ அ- அ
தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து பிரச்சனை குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் டிஎஸ்பி சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. அலுவலகத்தினர் காரை வாங்கிக் கொண்டதால் வாகனம் இன்றி வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் நடந்து சென்றார். இந்த சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, எஸ்பி அலுவலகத்தில், எஸ்.பி ஸ்டாலின், உளவு பிரிவு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் டிஐஜி ஜியா உல்ஹக் விசாரணை மேற்கொண்டு சுந்தரேசன் மீது சஸ்பெண்ட் உத்தவை பரிந்துரை செய்துள்ளார்.
இதனிடையே, காலை அலுவலகம் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரேசன், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக குற்றம்சாட்டினார். முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை தற்போது கூறுவதாகவும், தன் மீது தவறு இருந்தால், அப்போதே தன்னை சஸ்பெண்ட் செய்திருக்கலாம் என்றார்.
தனது பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் இன்னும் ஏன் தலையிடவில்லை என்று தனக்கு தெரியவில்லை என்றும் தமிழக டிஜிபி தன்னை அழைத்து இன்னும் ஏன் விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை என்றும் டிஜிபி சுந்தரேசன் கூறியுள்ளார்.
நேர்மையாக இருப்பதால் பழிவாங்கப்படுவதாகவும், உயரதிகாரிகள் தனக்கு மனஅழுத்தம் தருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை டிஎஸ்பி சுந்தரேசன் கூறியிருந்தார். குறிப்பாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் இருவரும் தனக்கு அழுத்தம் தருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.