ஆன்லைன் கேம்ம விடுங்க கால்பந்து விளையாடலாம் வாங்க

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆன்லைன் விளையாட்டுகளில் இளைய தலைமுறையினர் மூழ்குவதை தடுக்கும் வகையில், சென்னையில், ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கால்பந்தாட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை வழங்குவது யார், இந்த பயிற்சியால் என்னென்ன பலன் என்பது குறித்து சற்று விரிவாக காணலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கும் மன அழுத்தத்தை போக்கவும் விளையாட்டு என்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போதுள்ள இளைய தலைமுறைகள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஆன்லைன் விளையாட்டுகளிலும் கார்ட்டூன் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களிலும் மூழ்குவதால், மைதானங்களில் சென்று விளையாடுவதை இளையதலைமுறையினர் மறந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.
 
இளைய தலைமுறைகளை விளையாட்டின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவே முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர்கள் ஒன்றாக இணைந்து யுனைடெட் பேந்தர்ஸ் எனும் கால்பந்து குழுவை உருவாக்கி, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விடுமுறைகளில் இலவசமாக கால்பந்து பயிற்சி வழங்கி வருகின்றனர்.

ஆல் இந்தியா ஃபுட்பால் ஃபெடரேஷன் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களை வைத்து மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருவதாகவும், மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கிறார் முன்னாள் விளையாட்டு வீரர் மார்ட்டின்.

படிப்பு விளையாட்டு என அனைத்திலும் ஆன்லைனில் மூழ்கி இருக்கும் இந்த இளம் சமுதாயத்தினரை, இதுபோன்ற மைதானங்களில் அழைத்து வந்து விளையாட வைப்பது அவர்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை சேர்ப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடை விடுமுறையில் புதிய புதிய நண்பர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விளையாட்டை ஓர் அணியாக விளையாட வேண்டும், காலை நேரங்களில் படுக்கையில் இருந்து விரைவில் எழ வேண்டும் என பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் பயிற்சி பெறும் குழந்தைகள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.

விளையாட்டு மைதானங்கள் வெறும் பொழு போக்கும் இடம் அல்ல, அவை உடல் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் மன உறுதியையும், ஒழுக்க நெறிமுறைகளையும் வளர்க்கும் இடமாகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் இலவச கால்பந்து பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்தும் அமைந்துள்ளது.

Night
Day