சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கவுன்சிலர்கள் போன் செய்து மிரட்டுவதாக தூய்மை பணியாளர்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தூய்மை பணியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு 9வது நாளாக தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொடுத்த வாக்குறுதிக்கு ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர் கேள்வி எழுப்பியதால் ஆவேசமடைந்த தூய்மை பணியாளர்கள், கோரிக்கைக்கு செவி சாய்க்காத விளம்பர திமுக அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனியே, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தூய்மை பணியாளர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மாநகராட்சி இணை ஆணையர் ராம்கி நிறுவனத்தின் ஏஜெண்டாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். எங்களுடன் பிரியாணி சாப்பிடும் முதலமைச்சர், குப்பைகளை பொறுக்கி வாங்கும் சம்பளத்தை பிடுங்குவது தான் சமூக நீதியா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய தூய்மை பணியாளர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சுரேஷ், ஜனநாயக நாட்டில் சமூகநீதி என்றும், திராவிட மாடல் என்றும் பேசும் கட்சி அமைதியான முறையில் போராடுபவர்களை இப்படித்தான் நடத்துவார்களா என கேள்வி எழுப்பினார். கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு போன் செய்து மிரட்டுவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். திமுகவின் 153வது தேர்தல் வாக்குறுதியின் படி உள்ளாட்சி பணிகளில் 10 ஆண்டுகள் வேலை செய்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் சுரேஷ் வலியுறுத்தினார்.