எழுத்தின் அளவு: அ+ அ- அ
பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நடத்திவரும் போராட்டம் 9வது நாளாக நீடிக்கிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையின் போது கொடுத்த வாக்குறுதிக்கு ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர் சேகர்பாபு கேட்டது அராஜகத்தின் உச்சம் என தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தூய்மை பணியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு 9வது நாளாக தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொடுத்த வாக்குறுதிக்கு ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர் கேள்வி எழுப்பியதால் ஆவேசமடைந்த தூய்மை பணியாளர்கள், கோரிக்கைக்கு செவி சாய்க்காத விளம்பர திமுக அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தின் எதிரொலியால் நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து, துர்நாற்றம் வீசி வருதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தூய்மை பணியாளர்களின் கோரிக்கைளுக்கு விளம்பர திமுக செவி சாய்த்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.