3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு - வழக்கறிஞர்கள் ரயில் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்‍கறிஞர்கள் பணிகளை புறக்‍கணித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக, புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போது போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வழக்‍கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேரணியாக சென்று மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து, மத்திய அரசுக்‍கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசு இந்த மூன்று சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக வழக்‍கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய குற்றவியல் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் பார் அசோசியேஷன் சார்பில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பேரணியாக வந்த வழக்‍கறிஞர்களை ரயில் நிலையத்துக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினரிடையே இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

மதுரையில், மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ரயில்நிலைய நுழைவு வாயிலில் கூடி, மத்திய அரசுக்‍கு எதிராக முழக்‍கங்களை எழுப்பினர். இதனால் ரயில்வே நிலைய சாலை முழுவதிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நுழைவாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், காங்கேயம், சோமனூர், தாராபுரம் பகுதிகளில் இருந்து பேரணியாக வந்த வழக்கறிஞர்கள் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்களை எழுப்பினர். வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தை முன்னிட்டு ரயில் நிலையம் முன்பாக போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Night
Day