2025-26 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் 145 மாணாக்கர்கள் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். வரும் 7ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7ம் தேதி தொடங்கி, கடந்த 6ம் தேதி முடிவடைந்தது. அதன்படி, 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். இவர்களிலும் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் மட்டுமே உரிய சான்றுகளை பதிவேற்றி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 11ம் தேதி ரேண்டம் எண் ஆன்லைன் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதையடுத்து பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் 2025- 26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, 145 மாணாக்கர்கள் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சகஸ்ரா முதலிடமும், நாமக்கல்லை சேர்ந்த கார்த்திகா 2வது இடமும் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கடலூர் மாணவி தாரணி முதலிடமும், சென்னையை சேர்ந்த மைதிலி 2வது இடமும் பிடித்துள்ளனர். பொறியியல் கட்டணத்தில் மாற்றமில்லை என்றும்  கடந்த ஆண்டு கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும் என்றும் சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Night
Day