எழுத்தின் அளவு: அ+ அ- அ
காவிரி பாசன மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், பருவமழையால் அவை முற்றிலும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களும் தொடர் மழையில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது உழவர்களுக்கு இரட்டைப் பேரிடியாக அமைந்துள்ளது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காவிட்டால் விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள் என்பதால் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.