2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகத்துக்‍கு வரும் பிரதமர் மோடி, ராக்‍கெட் ஏவு தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்‍கு அடிக்‍கல் நாட்ட உள்ளார். பாம்பனில் கட்டப்பட்டுள்ள ரயில்வே துாக்கு மேம்பாலத்தையும் நாட்டுக்‍கு அர்ப்பணிக்‍க உள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நாளை மதியம் புறப்பட்டு கோவை மாவட்டம், சூலூர் வருகை தரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் செல்கிறார். அங்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்.

பின்னர் 4 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, 5.15 மணிக்கு விரகனூர் டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் Digital Mobility நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

பின்னர் இரவு பசுமலை தங்கும் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி, நாளை மறுநாள் காலை 8.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்கிறார். 

அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இஸ்ரோ சார்பில் குலசேகரப்பட்டினத்தில், 2,233 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தூத்துக்குடியில் வெளி துறைமுக விரிவாக்க பணிகளையும் பிரதமர் துவக்கி வைக்கிறார். மேலும், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் 520 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே துாக்கு மேம்பாலத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

பின்னர், நாளை மறுநாள் காலை 10.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லைக்‍கு செல்லும் பிரதமர் மோடி, காலை 11:15 மணிக்கு நடைபெறும் பொது கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு 12:15 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு பிரதமர் மோடி புறப்படுகிறார். பிரதமரின் வருகையொட்டி, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மதுரை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மேலூர், திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம் வழியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சிவகங்கை, நெல்லை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை வழியே செல்லக்கூடிய வாகனங்களும், மாற்று மார்க்கத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட விழா அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணமாக அடையாள அட்டை உள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், விழா நடைபெறும் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் அவ்வப்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


Night
Day