பொன்னேரிக்கரையில் ஏகனாபுரம் விவசாயிகள் டிராக்டர் பேரணி தடுத்து நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிராக்டர் பேரணி நடத்த முயன்ற பொதுமக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக விளம்பர திமுக அரசு 20 கிராமங்களில் 5746 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக பொடாவூர் கிராமத்தில் 105 ஏக்கர் நில கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்த நாள் முதலே ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், 580 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பொடவூர் பகுதியில் முதற்கட்டமாக நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று ஏகனாபுரம் அம்பேத்கர் சிலையிலிருந்து டிராக்டர் மூலமாக பேரணியாக செல்ல 13 கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர். பொன்னேரிகரையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவும் பொதுமக்கள் முடிவு செய்திருந்தனர். 

இதையடுத்து திருவள்ளூர் காஞ்சிபுரம் என இரண்டு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. போராட்டத்தில் ஈடுபடுவதற்கான டிராக்டர்கள் தயாரான நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறை முன்கூட்டியே வலுக்கட்டாயமாக கைது செய்தது. இதனை கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் படுத்து உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தாங்கள் திட்டமிட்டபடி டாக்டர் பேரணி நடத்துவோம் என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் டிராக்டரில் ஏறிய நிலையில் உடனடியாக விவசாயிகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அருகில் இருக்கும் சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். மேலும் டிராக்டர்களை பறிமுதல் செய்ய முயன்றதால், காவல்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பல ஆண்டுகளாக இப்பகுதிகளில் பூர்வீகமாக விவசாயம் செய்து வருவதாகவும், ஆடுகளை வைத்து விவசாயம் செய்து வரும் தங்களை தற்போது இந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு போக சொன்னால் எப்படி போக முடியும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், காவல்துறையினர் வயதானவர்கள் என கூட பார்க்காமல் வலுக்கட்டாயமாக கைது செய்வது ஏற்புடையதல்ல எனவும், எங்கள் நிலத்தை விட்டு நாங்கள் ஒருபோதும் போக மாட்டோம் என மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 



Night
Day