எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் பணி நிரந்தரம் கோரி அமைதி வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை, விளம்பர அரசின் ஏவல்துறையான காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி கைது செய்தனர்.
பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்தும், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்காமல் சென்னை மாநகராட்சியே நேரடியாக பணி வழங்க வலியுறுத்தியும் சென்னை கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகரில் வீட்டின் மாடியில் 13 தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அவர்களை சந்தித்து ஆதரவளிக்க வந்த 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களையும் கைது செய்ய முயற்சித்தனர். இதனால் காவல்துறையினருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆண் காவலர்கள் பெண் தூய்மை பணியாளர்களை அடித்து இழுத்து கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின் போது ஆண் காவலர்கள் சிலர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்ததாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஆண் காவலர்கள் பெண் தூய்மை பணியாளர்களின் உடையை கிழித்து அடித்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். உலகம் முழுவதும் சுற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை என்றும் தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கொருக்குப்பேட்டையில் கைது செய்யப்பட்ட தங்களை பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக மதுரவாயில் நோக்கி அழைத்துச் சென்று அலைக்கழித்ததாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டினர். தண்ணீர் கூட கொடுக்காமல் தூய்மைப் பணியாளர்களை கொடுமை படுத்தியதில் கிரேஸ் மேரி,கல்பனா ஆகிய இரு தூய்மைப் பணியாளர்கள் மயக்கமடைந்தனர். பின்னர் இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.