14 காளைகள் அடக்கிய "சிங்கம்" பார்த்திபன் - கார் பரிசு

எழுத்தின் அளவு: அ+ அ-

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு திருவிழா நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இறுதிசுற்றின் முடிவில் அதிகபட்சமாக 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த நத்தம் பார்த்திபன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 

தை பொங்கல் கொண்டாட்டமாக தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டு போட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ்பெற்றதாகும். அந்த வகையில், தை முதல் நாளான நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

தொடர்ந்து, தை 2வது நாளான நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரம் காளைகள் அழைத்துவரப்பட்டன. 900 மாடுபிடி வீரர்கள் களம்கண்டனர். முதலாவதாக 7 முதன்மை காளைகள் அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, பார்வையாளர்களின் ஆரவாரத்துடன் போட்டிக்கான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அடக்கி வீரத்தை வெளிப்படுத்தினர்.

போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், குக்கர், கட்டில், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.

மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 930 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.  ஒவ்வொரு சுற்றிலும் காளைகளை அடக்கி சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர். இறுதிசுற்றின் முடிவில் அதிகபட்சமாக 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த நத்தம் பார்த்திபன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை மஞ்சம்பட்டி துளசியும், 3வது இடத்தை பொதும்பு பிரா ஆகியோரும் பிடித்தனர். சிறந்த காளையாக மதுரை சத்திரபட்டியை சேர்ந்த விஜயாதங்கபாண்டி என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

Night
Day