ரூ.1000 கோடி நிதி எங்கே... வஞ்சிக்கப்படும் வட சென்னை... நிதிநிலை அறிக்கையால் ஏமாற்றம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

வடசென்னை மேம்பாம்பாட்டிற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக நிதி நிலை அறிக்கையில், விளம்பர திமுக அரசு அறிவித்தநிலையில், அது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 1000 கோடிக்கான செயல் திட்டம் தான் என தற்போது விளக்கம் அளித்துள்ளது. வடசென்னை மக்களுக்கு தொடர்ந்து அல்வா கொடுத்துவரும் திமுக அரசின் தில்லாலங்கடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அரசு, ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வது வழக்கம். அந்த அறிவிப்பில் பல்வேறு திட்டங்களையும், அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த அறிவிப்பையும் நிதியமைச்சர் அறிவிப்பார்.  

இந்த நிலையில் வெற்று அறிக்கைகள் மூலம் ஆட்சி செய்யும் திமுக அரசு, இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதில் வடசென்னை மேம்பாட்டிற்காக 1000 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. 

கடந்த ஆண்டும் வடசென்னை மேம்பாட்டிற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், அந்த தொகை என்ன ஆனது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்த நிலையில் நிதித்துறை செயலர் உதயசந்திரன் அளித்திருந்த பேட்டி, அனைவருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அதில், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 1000 கோடிக்கான செயல் திட்டம் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, இந்த ஆண்டு புதிதாக 1000 கோடி ஒதுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

வடசென்னை பகுதியில் குடிநீர், சாலை என பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், அதை எல்லாம் திமுக அரசு கண்டு கொள்ளவதில்லை என்றும், நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டு கழித்து செயல் திட்டம் வெளியிடும் இவர்கள், திட்டங்களை எப்பொழுது அமல்படுத்துவார்கள் என்று வடசென்னை வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடசென்னை மேம்பாட்டு நிதியில், பெண்கள் மற்றும் இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், வடசென்னை பகுதியில் விளையாட்டு மைதானங்களும், கழிவறை வசதிகளுக்கான அடிப்படை தேவைகள் உள்ள நிலையில், அரசு அவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றும் வடசென்னை மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

வடசென்னை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கிய அரசு, வடசென்னை பகுதி மக்களின் தேவைகள் குறித்து மக்களிடம் எவ்வித கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த சுமித்ரா.

மேம்பாடு என்பது வெறும் கட்டிடங்களால் இல்லை, உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய வடசென்னை மக்களின் சமூக மேம்பாடுதான் என்பதை விளம்பர அரசு புரிந்து கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே, வடசென்னையில் வசிக்கும் மக்களின் விருப்பமாக உள்ளது.

Night
Day