விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்குக - புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோடை மழையால் பாதிப்படைந்துள்ள தமிழக விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

மழை மக்களின் உயிர் என்ற நிலை மாறி கோடை மழை டெல்டா விவசாயிகளின் துயர் துளிகளாக மாறி விட்டது. கோடை மழை பல ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்களை சேதப்படுத்தி டெல்டா விவசாயிகளின் வாழ்க்கையில் துயரத்தை பொழிந்துள்ளது- டெல்டா மாவட்ட விவசாயிகள் போதிய மழை இல்லாமலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நெல் சாகுபடி செய்வதில் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்-  கர்நாடக அரசு காவிரியில் நீரை திறந்துவிடாததாலும், அதனை பெற்றுத்தர தவறிய திமுக தலைமையிலான அரசின் சுயநலப்போக்கால் டெல்டா விவசாயிகள் மிகவும் துன்பப்படுகின்றனர்- அறிவிக்கப்படாத மின்தடையால் சாகுபடி செய்த பயிர்களுக்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், கருகி போன பயிர்களுக்கு மத்தியில், மீதமிருந்த பயிர்களும் இன்றைக்கு கோடை மழையில் வீணாகி இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் பொதுவாக ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 400 கிலோ நெல் சாகுபடி செய்ய இயலும் என கூறப்படுகிறது-முப்போகம் விளைந்த டெல்டா மாவட்டங்களில் இன்று விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது- "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது" என்ற முதுமொழிக்கு ஏற்ப விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். நீரை தேக்கி வைக்க வேண்டிய ஊருணிகள், கண்மாய்கள் போன்றவைகள் திமுக தலைமையிலான அரசால் தூர்வாரப்படவில்லை -  எனவே, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த தேவையான மழை நீரை போதிய அளவு தேக்கி வைக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக தலைமையிலான அரசின் அலட்சியப்போக்கால் விவசாயிகள் பெரிதும் மனவேதனை அடைந்துள்ளதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதியாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்த மாவட்டம்- கடந்த பருவத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகள் இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர்-இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆழ்குழாய் பாசன வசதி விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துவந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இம்மாவட்டத்தில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி நெற்பயிர்கள் காய்ந்து கருகின -  விவசாயிகள் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் பயிரை காப்பாற்றிட தண்ணீரை விலைக்கு வாங்கி பயிரை காப்பாற்றும் முயற்சியில் போராடி வந்தனர்- தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக பெய்த கோடை மழையால் பல்வேறு கிராமங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான வயல்வெளிகள் மழைநீரால் சூழ்ந்தன-இந்நிலையில் ஒளிமதி ஊராட்சியில் மட்டும் 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட வேண்டிய , வயல்வெளியில் தேங்கிய மழைநீர் வடிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் நெற்பயிர்கள் முழுவதும் வீணாகிவிட்டதாக விவசாயிகள் மிகவும் வேதனைப்படுகின்றனர் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் 2 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு பஞ்சுகள் வெடித்து அனைத்தும் மழையில் நனைந்து கறுப்பு விழுந்துள்ளதால் விற்பனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக சொல்லி விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்- ஏக்கருக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் பருத்தி பஞ்சுகள் நனைந்து சேதமடைந்துள்ளதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கோவிந்தநல்லூர் கிராமத்தில் கோடை மழை காரணமாக விவசாயம் பெரிதும் பாதிப்படைந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடை மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்துறையும், வருவாய்துறையும் விரைவாக கணக்கெடுத்து மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கிடக் கோரி 10 கிராம விவசாயிகள், பாதிக்கப்பட்ட வயலில் இறங்கி போராடி வருகின்றனர்.

விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதை மக்களவை தேர்தலின் வெற்றிக்களிப்பில் மூழ்கியுள்ள திமுக விளம்பர அரசு ஒரு கணம் சிந்தித்து பார்க்கவேண்டும். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் போன்றது, கீழிருப்பவர் மேலேவருவதும், மேலிருப்பவர் கீழேவருவதும் இயற்கை நமக்கு கற்றுத்தந்த பாடம் என்பதை இந்த பொய் மூட்டைகளின் இருப்பிடமாக திகழும் திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் - எனவே, உங்களின் இந்த தற்காலிக சந்தோசத்தை தள்ளிவைத்துவிட்டு விவசாயிகளின் துயரங்களை போக்க தக்க நடவடிக்கை எடுத்து போதிய இழப்பீடு வழங்கி அவர்களை காப்பாற்ற வேண்டும்- தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய ஆய்வு செய்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day