விளம்பர திமுக ஆட்சியில் அதிகரிக்கும் நகை கொள்ளை சம்பவங்கள் - மக்கள் அச்சம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரேநாளில் 150 சவரன் தங்க நகைகள் திருட்டு போயுள்ள சம்பவம் பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் சுந்தர். இவரது வீடும், கடையும் ஒரே இடத்தில் வைத்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானைச் சேர்ந்த ரோஹித் என்ற நபரை நகைக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். பிறகு சொந்த ஊருக்கு சென்ற ரோகித் கடந்த 7ம் தேதி மீண்டும் சென்னை வந்து குடும்ப கஷ்டம் காரணமாக மீண்டும் பணியில் அமர்த்திக் கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். 

இதனால், சுந்தர் மீண்டும் ரோகித்தை வேலைக்கு அமர்த்தியுள்ளார். நேற்று முன்தினம் கடையில் இருந்த நகைகளை சரிபார்த்த போது 60 சவரன் எடை கொண்ட பிரேஸ்லெட்டுகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தர், சிசிடிவி காட்சிகளை பார்த்த போது கடையிலிருந்து பிரேஸ்லெட்டுகளை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ரோகித் கடையை பூட்டிச் சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் சுந்தர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரோகித்தை தேடி வருகின்றனர்.

இதனிடையே, சென்னை கொட்டிவாக்கத்தில் மென் பொறியாளர் வீட்டில் 60 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
ஈ.சி.ஆர். சாலையில் உள்ள லட்சுமண பெருமாள் தெருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மகேஷ் குமார் என்பவரின் வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த ரமேஷ் - பினிதா தம்பதியினர் தங்கி வீட்டு வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மகேஷ்குமார் தனது மனைவியுடன் வேலூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நேபாள தம்பதியை தேடி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூரில் துணிக்கடை உரிமையாளர் மகனை கட்டிப்போட்டு 30  சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூரில் உள்ள துணிக்கடை ஒன்றின் உரிமையாளர் மகன் அம்பரீஷ். இவரது பெற்றோர் வெளியூர் சென்ற நிலையில், ஓரினச் சேர்க்கை பிரியரான அம்பரீஷ், கிரிண்டர் ஆப் மூலம், ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் நேரில் வந்துள்ளனர். அவர்கள் அம்ரீஷை கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த 30 சவரன் தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Night
Day