விநாயகர் சதுர்த்தி திருநாள் -புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்து செய்தியில், ​"முன்னவனே யானை முகத்தவனே" என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், தமது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

வினை தீர்க்கும் தெய்வமான விநாயகர் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியன்று, அனைவரும் தங்கள் வீடுகளில் களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அருகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, முதன்மை கடவுளான விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

"கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை; கணபதி என்றிடக் காலனும் கைதொழும்; கணபதி என்றிட கருமம் ஆதலால்; கணபதி என்றிடக் கவலை தீருமே'' என்ற திருமந்திரத்தில், கணபதியை வணங்கி புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி திருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

சகல கணங்களுக்கும் தலைவனாகிய கணபதியாய், தடைகளைத் தகர்க்கும் விக்னேஸ்வரராய் விளங்கும் விநாயகப் பெருமான், அவதரித்த இந்நன்னாளில் தமிழ்நாட்டில் இருளகன்று ஒளி வீச, விவசாய மகசூல் பெருக, அராஜகம் அழிய, அமைதி தவழ, அனைத்து தரப்பு மக்களும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் வாழ, மன்னராட்சி அழிந்து, மக்களாட்சி மலரவேண்டுமென்று விநாயகப் பெருமானை பிரார்த்திப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும், சகோதரத்துவம், மனிதநேயம் தழைக்கட்டும். துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும், வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும், உலகமெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day