ரேஷன் அட்டை பெற ரூ.10,000 லஞ்சம் கேட்கும் இடைத்தரகர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த அம்பத்தூரில் புதிய குடும்ப அட்டை பெற்றுத்தர தரகர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதனை மையமாகக் கொண்டு பல தரகர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று அதனை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வதாக கூறப்படுகிறது. அந்தவகையில் குடும்ப அட்டை விண்ணப்பிக்க கோரிய நபரிடம் செல்ஃபோனில் தொடர்புகொண்ட தரகர் ஒருவர், தனக்கு தெரிந்த அதிகாரிகள் இ-சேவை மையத்தில் பணியாற்றுவதாகவும், குடும்ப அட்டை வாங்கித்தர 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வர கொடுக்கவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார். மேலும், அதிகாரிகளுக்கும் பணம் தரவேண்டும் என்பதால்தான் இந்தத் தொகை பெறுவதாகவும், இல்லையென்றால் வேலை நடக்காது என்றும் பயனாளியிடம் தரகர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமின்றி வில்லிவாக்கம் உப கோட்டம் அம்பத்தூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகம் முன்பு தரகர்கள் வசதியாக அமர்ந்துகொண்டு அரசு ஆவணங்களை பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி அதனை அதிகாரிகளிடம் பகிர்ந்து கொடுப்பதாக வீடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்ற நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Night
Day