கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் கிளியாபட்டு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் திருவண்ணாமலையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு வள்ளிவாகை கிராமத்தில் உள்ள முருகர் கோவிலுக்கு சென்ற அவர், சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வன்னியர் நகர் பகுதி அருகே அவரது கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. விபத்துக்குள்ளான காரில் சிக்கி தவித்த கோபாலின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை கயிறு கட்டி மீட்டனர். 

விபத்தில் படுகாயமடைந்த கோபால் திருவண்ணாமாலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குபதிவு செய்து காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் உடனடியாக கிணற்றை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day