ரேசன் அரிசியை எறும்பு கூட உண்ணாது - கிராம சபையில் விளாசல் - சரமாரியாக குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன்வைத்ததால், பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

தூத்துக்குடி மாவட்டம் நடு நாலு மூலைக் கிணறு கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கடந்த ஆண்டு போடப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும், ஊரக வேலைவாய்ப்பில் பெரும் ஊழல் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். ஊரக வேலைக்கான பதிவேடுகளை கேட்டும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால், பதிலளிக்காமல் அதிகாரிகள் பாதியிலேயே வெளியேறினர். 

மதுரை மாவட்டம் பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய நல்லிவீரன்பட்டியை சேர்ந்த தனசேகரன், எங்களது கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் போடும் ரேஷன் அரிசியை எறும்பு கூட திங்காது எனவும், ஒருமுறை நீங்கள் சாப்பிட்டு பார்த்தால் எங்களது கஷ்டம் புரியும் எனவும் ஆவேசமாக பேசினார். இளைஞரை சமாதானப்படுத்திவிட்டு பேசிய ஆட்சியர் பிரவீன் குமார், உங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என கூறி கூட்டத்தை முடித்தார்.

தேனி மாவட்டம் நரியூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். இந்த கிராமத்திற்கு சாலை அமைக்க வனத்துறை தடை விதித்ததை கண்டித்து இந்த செயலில் கிராம மக்கள் ஈடுபட்டனர். பொது மக்களிடம் ஒருமணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.

தருமபுரி மாவட்டம் கரகூர் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நண்பகல் ஒரு மணி வரை அதிகாரிகள் வராததால்  நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் விரக்தியுடன் திரும்பிச்சென்றனர். விளம்பர திமுக அரசின் ஆட்சியில் கிராம சபை கூட்டம் கூட முறையாக நடத்தப்படுவதில்லை என பொதுமக்கள் ஆதங்கம் வெளிப்படுத்தினர்.

சேலம் மாவட்டம் சாணாப்பட்டி பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சாணாரப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தண்டலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அந்த கிராமத்தில் உள்ள அருந்ததித் தெரு பெயரை மாற்ற கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். தெரு பெயரை மாற்ற நடவடிக்கை எடுத்தால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவோம் என அதிகாரிகளிடமே பொதுமக்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம், 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை வைத்து நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த மக்கள் குடிநீர் பிரச்சனை, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து புகார் தெரிவித்தனர். ஆனால் குறைகளை கேட்காமல் தீர்மானங்கள் வாசிப்பதிலேயே அதிகாரிகள் கவனம் செலுத்தியதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் கிராமத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. செபஸ்தியாபுரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக குடிநீர், தெருவிளக்கு, ரேஷன் கடை, போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், 100 நாள் வேலை இந்த ஆண்டு 12 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், முழுமையாக வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Night
Day