எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய மாநகராட்சி திமுக மண்டல தலைவர்கள் மற்றும் குழுதலைவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்று கெள்ளப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டிடங்கள், வீடுகளுக்கு சொத்துவரி குறைவாக நிர்ணயித்து 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், ஓய்வு உதவி கமிஷனர் ரெங்கராஜன், மண்டலம் 3 தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் குமரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து தி.மு.க., மண்டல தலைவர்களான பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, சுவிதா ஆகியோரிடமும், அவர்களின் கணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வரி முறைகேடு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சம்பந்தபட்ட திமுக மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய மேலிடத்தால் அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து, மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, வாசுகி சசிகுமார் பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகியோர் ராஜினாமா செய்தனர். மேலும், நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமி ஆகியோரும் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இந்நிலையில், மண்டல தலைவர்கள் 5 பேர் மற்றும் 2 குழுத் தலைவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டதாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் அறிவித்துள்ளார்.