ரூ.1,000 கோடி அரசு நிலம் அபேஸ்...! பட்டா கொடுத்த ஆபீசர்களுக்கு ஆப்பு...!

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்...

திருவள்ளூர் மாவட்டம் விளங்காடுப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் செல்வம் மீரான். இவர் அரசு புறம்போக்கு நிலங்கள் எங்கு உள்ளன, எவ்வளவு ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன என்பன உள்ளிட்ட விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளார். அதில் திருவள்ளூர் மாவட்டம் விளவங்கோடு ஊராட்சியில் அதிக அளவில் அரசு நிலம் இருப்பது தெரிய வந்தது. அதில் முதல் கட்டமாக குறிப்பிட்ட 35 சர்வே எண்களில் உள்ள நிலங்களை மட்டும் ஆய்வு செய்துள்ளார். அதில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் நிலம் அரசு வருவாய்த்துறை கணக்கில் குளம், குட்டை, வாய்க்கால், மயானம், கோவில் நிலம், புறம்போக்கு என இருப்பது தெரியவந்தது.

ஆனால் அவை அனைத்தும் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பத்திரப்பதிவுத்துறை, மாவட்ட ஆட்சியர் என சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்காததால் உரிய ஆவணங்களை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு அரசு நிலம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி, மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் ஆகியோர் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. 

இது குறித்து பேசிய மனுதாரர் செல்வம் மீரான், தங்கள் கிராமத்தில் அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலத்துக்கு, வருவாய்த்துறையினர் எந்தவொரு ஆவணமும் இல்லாமல் பட்டா வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் தற்போது தொழிற்கூடங்களாகவும், குடோன்களாகவும், வீடுகளாகவும் உள்ளதாக பகீர் தகவலை கூறினார். 

ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பதில் அளிக்காவிட்டால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் கூறினார். 

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய உறுதுணையாக இருந்த அதிகாரிகளை கண்டறிந்து, தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Night
Day