நாகர்கோவில் அருகே அச்சுறுத்தும் சிறுத்தை... முடங்கிய மக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளயே முடங்கியுள்ளனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்...

நாகர்கோவில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை உலா வந்த கண்கணிப்பு கேரமரா காட்சிகள் தான் இவை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது,  காடுகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து கால்நடைகளை கடித்து குதறி வருவது வாடிக்கையாகி வருகிறது. 

அந்த வகையில், தற்போது சிறுத்தை ஒன்று நள்ளிரவு நேரத்தில் நகர் பகுதிக்குள் வந்த கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பார்வதிபுரம் அருகே உள்ள கணியாகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உழவன்கோணம் பகுதிகளில் சிறுத்தை உலா வந்த வீடியோவை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காண்காணிப்பு கேமரா வீடியோக்களை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியதால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

சிறுத்தை நடமாட்டம் மிகுந்த பகுதி என சந்தேகிக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ள வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை விரைவில் பிடிபட வேண்டும் என்பதே பார்வதிபுரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day