எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக வலிமை பெறவும், 2026ல் கழகம் வெற்றி பெறவும் அனைவரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கழக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கரட்டூரில் உள்ள அஇஅதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய திருஉருவப்படத்திற்கு கழக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கழக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், பேரறிஞர் அண்ணாவின் புனித பெயரில் உருவான அஇஅதிமுக-வை புரட்சித்தலைவர் உருவாக்கினார் என்றும் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா கட்டிக் காத்து வளர்த்ததாகவும் கூறினார். புரட்சித்லைவர் மற்றும் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மாவின் கனவின்படி, கழகத்தை 100 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற நோக்குடன், கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசியதாக கூறினார். இதற்கு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் உண்மையான விசுவாசிகளிடம் இருந்து பெரும் வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.