எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் புறக்கணித்துள்ளனர். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் இளைஞரணி தலைவராக தனது பேரன் முகுந்தனை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் குழுவில் அறிவித்தார். இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விழா மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, தானே இனிமேல் கட்சி தலைவர் என ராமதாஸ் அறிவித்த நிலையில், தலைவர் பதவியில் தானே தொடர்ந்து நீடிப்பேன் என அன்புமணி பதிலடி கொடுத்தார். இதன் மூலம் தந்தை, மகனுக்கு இடையிலான மோதல் மேலும் வலுவடைந்தது. கடந்த 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் ஒழுங்காக பணியாற்றாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிடுவேன் என ராமதாஸ் பேசி இருந்தார்.
இந்த சூழலில் இன்று காலை 11 மணிக்கு திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜிகே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை கட்சி தலைவர் அன்புமணியும் அவரது ஆதரவு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களும், புறக்கணித்துள்ளனர். பாமகவில் 218 நிர்வாகிகள் உள்ள நிலையில் 20 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய, ராமதாஸ் சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது என்று கூறினார்.