எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராணிப்பேட்டை மாவட்ட திமுக நிர்வாகி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட 20 வயது மாணவி வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை இல்லாத நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். இந்தநிலையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அவரது தாயாருடன் புகார் அளிக்க சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தார்.
ஆளுநரை சந்திக்க முன் அனுமதி பெறாததால் அவரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்தனர். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி பெண், தமிழக காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் முறையிட வந்ததாக கூறினார்.
திமுக நிர்வாகி தெய்வச்செயலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய வழக்கில் கிடைக்கும் தண்டனைதான் மற்ற பெண்கள் தைரியமாக வெளியில் வர உறுதியாக இருக்கும் என எண்ணியதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் இப்போது அந்த நம்பிக்கை இல்லை என்றும் திமுக ஐடி விங்-ஐ சேர்ந்த ராகுல், காவல்துறையிடம் கொடுத்த ஆதாரங்களை எல்லாம் வெளியிட்டு தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.
இந்தநிலையில் புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயாரை கிண்டி காவல் ஆய்வாளர் தேவேந்திரர், ஆட்டோவில் ஏற்றி RDO அலுவலகத்திற்கு பெண் காவலர்களுடன் ஆட்டோவில் அனுப்பி வைத்தார். ஆனால், அங்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை RDO- சந்திக்காமல் உட்கார வைத்து விட்டு மீண்டும் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். எங்கு செல்கிறோம் எனக் கூறாமல் அழைத்துச் சென்றதால் அச்சமடைந்த அந்தப் பெண்ணும் தாயாரும் ஆட்டோவில் இருந்து இறங்கி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலுக்கட்டாயமாக தங்களை ஆட்டோவில் ஏற்றி அலைக்கழித்து வருவதாகவும், ஆளுநரை சந்திக்க விடாமல் முடக்கும் நோக்கிலேயே காவல்துறை நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணும் தாயாரும் மற்றொரு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள். அவர்களின் ஆட்டோவை காவல்துறை வாகனம் பின் தொடர்ந்து சென்றதால் பரபரப்பு நிலவியது.