மேகதாது விவகாரம்-மத்திய இணையமைச்சருக்கு புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மேகதாது பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, மத்திய ஜல்சக்‍தித்துறை இணையமைச்சர் சோமண்ணா பேசியிருப்பது குறித்து, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளின் நலனுக்‍கு முற்றிலும் விரோதமானது என்றும் இருமாநில மக்‍களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை சீர்குலைக்‍கும் செயல் என்றும் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடக மக்‍களின் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களையும் சாராத வேறு ஒருவரை மத்திய ஜல்சக்‍தி துறை இணை அமைச்சராக நியமிக்‍க வேண்டும் என்றும் மத்திய அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு.சோமண்ணா, மேகதாது பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கருத்தை, தான் ஒரு மத்திய அமைச்சர் என்பதை மறந்து, கர்நாடகாவின் குரலாக பேசியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமானது - இரு மாநிலத்தில் உள்ள மக்களின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் செயல் - திமுக தலைமையிலான அரசு, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என, புரட்சித்தாய் சின்னம்மா எச்சரிக்‍கை விடுத்துள்ளார். 

தமிழகத்தின் உரிமையை பறித்தும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிக்கிறது - இதுபோன்று இயற்கைக்கு மாறான வகையில் தமிழகத்தையே பாலைவனமாக்கும் வகையில் கர்நாடக அரசால் தீட்டப்படுகிற நயவஞ்சக  திட்டத்திற்கு தமிழகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என, புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார். 

பூகோள ரீதியாக தமிழகம் வடிகால் மாநிலமாக அமைந்துவிட்டது - இந்த நிலையில் கர்நாடகா, கேரளா போன்ற மேல் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்கள் புதிய அணைகளைக் கட்டுவதன் மூலம், தமிழகத்தில் வடிகின்ற நீரை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர் - தமிழகத்திற்கு வடிகின்ற நீரை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது - இது போன்ற நடவடிக்கைகள் இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது - வடிகால் மாநிலங்களுக்கு உரிய சட்டப்பாதுகாப்பு உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது - காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, வடிகால் மாநிலமாக அமைந்துள்ள தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணையைக் கட்ட முடியாது - எனவே சட்டப்போராட்டங்களின் வழியாக தமிழகத்திற்கு கிடைத்த பாதுகாப்பை காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை - எனவே கர்நாடக அரசு தனது இஷ்டத்திற்கு செயல்படமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்வதாக, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு தேவையான சட்டப்பாதுகாப்பை பெற்றுத்தந்ததோடு தமிழக விவசாயத்தையும் அழிந்திடாமல் காப்பாற்றியது புரட்சித்தலைவி அம்மாதான் என்பதை இந்நேரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

புரட்சித்தலைவி அம்மாவின் தொடர் முயற்சியால், ஆண்டுக்கு, 205 டி.எம்.சி நீரை, தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டும் என  காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது - அதன்படி தமிழகத்திற்கு நீரை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புரட்சித்தலைவி அம்மா மேற்கொண்டார் - அதனைத்தொடர்ந்து, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் ஒன்பதாவது அட்டவணையில் வெளியிட செய்தார் - மேலும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி நீரை பெறுவதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார் - அதனைத்தொடர்ந்து பல்வேறு சட்ட போராட்டங்களை முன்னெடுத்து காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும் என தனது இறுதிமூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடினார் -   கடந்த 2016-ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா, தனது உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் கூட, தமிழக அரசு அதிகாரிகளை மருத்துவமனைக்கே நேரில் வரவழைத்து, காவிரி நதி நீரை பெறுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார் - 

புரட்சித்தலைவி அம்மா தொடர்ந்து மேற்கொண்ட நீண்ட கால சட்ட போராட்டத்தின் பயனாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது - இத்தகைய சூழலில் கர்நாடக அரசு எந்தவித கட்டுப்பாடுமின்றி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது - கர்நாடக அரசு தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட இயலாது - தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து இருக்கும் திமுகவினர் கர்நாடகா காங்கிரஸ் அரசின் எந்தவித சமரசத்திற்கும் உடன்படாமல், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட துடிக்கும் கர்நாடக அரசின் எண்ணத்தை முறியடிக்கவேண்டும் என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை நெடுங்காலமாக இருந்துவரும் நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சராக நியமித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது - இது இரு மாநிலங்களுக்கு இடையே எதிர்ப்புகளைத்தான் வலுப்படுத்தும் என்பது இப்போதே தெளிவாக வெளிப்படுகிறது - மத்திய அமைச்சர் நாட்டில் உள்ளஅனைத்து மாநில மக்களையும் சமமாக நினைப்பவராக இருக்க வேண்டும் - அவரது செயல்பாடுகள் நடுநிலைத்தன்மையுடன் இருப்பது மிகவும் அவசியம் - எனவே, தமிழகம் மற்றும் கர்நாடக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களையும் சாராத வேறொருவரை மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சராக  நியமிக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக்‍ கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் எடுத்த உறுதியான நடவடிக்கைகளைப்போன்று இன்றைய திமுக தலைமையிலான அரசு தேவையான சட்டநடவடிக்கைகளை விரைந்து எடுத்து கர்நாடகா, காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட எந்த ரூபத்தில் முயற்சிகள் மேற்கொண்டாலும் அதற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - திமுகவினர் காவிரி பிரச்னையில் கர்நாடகாவில் உள்ள தங்களது கூட்டணி அரசைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day