எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும், படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும் என வேவ்ஸ் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஊடகம், தொலைக்காட்சி சேனல்கள், ஓ.டி.டி., தளங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு 'வேவ்ஸ்' எனப்படும் உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை இன்று மும்பையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இன்று தொடங்கி வரும் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திரையுலகினர், தொலைக்காட்சித்துறை, அனிமேஷன், பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மும்பையிலுள்ள ஜியோ கன்வென்சன் மையத்தில் நடைபெறும் வேவ்ஸ் மாநாட்டில், ரஜினிகாந்த், அனில் கபூர், அமீர் கான், சிரஞ்சீவி, மோகன்லால், அக்க்ஷய் குமார், தீபிகா படுகோன், ஹேமமாலினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த திரைத்துறையினர், படைப்பாளிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இன்று ஒரே இடத்தில் கூடியிருப்பதாக குறிப்பிட்டார். வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும், படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும் என்று பிரதமர் தெரிவித்தார். திரைக்கலைஞர்கள் உலகளவில் தங்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணருவதற்கான அடித்தளத்தை அமைத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
இதனிடையே மாநாட்டில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற நிகழ்வுக்குப் பிறகு, தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசாங்கம் இந்த நிகழ்வை ஒத்திவைக்கும் என்று பலர் தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டார். ஆனால், இந்த நிகழ்ச்சி நிச்சயமாக நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும், ஏனென்றால் பிரதமர் மோடி ஒரு போராளி என்றும் எந்தவொரு சவாலையும் அவர் சந்திப்பார் என்றும் கூறினார். கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் சொல்லி வருவதை அவர் நிரூபிப்பார் என்றார். இந்த சூழ்நிலையையும் அவர் அழகாகவும் துணிச்சலுடனும் எதிர்கொண்டு காஷ்மீரில் அமைதியையும் நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.