எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னை முதியோர் இல்லத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அசைவ உணவு சாப்பிட்ட பலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. தென்காசி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து 13 பேர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இடைகால் பகுதியை சேர்ந்த முப்புடாதி என்ற முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் 12 பேரும், தென்காசி அரசு மருத்துவமனையில் 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 40 பேர் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.