எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஜெயங்கொண்டத்தில், தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை திட்டத்தில் குறைபாடு உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ஏற்கனவே மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் ஏமாற்றமடைந்த பெண்கள், உதயநிதி பேச்சால் கொதிப்படைந்து கூட்டத்தில் இருந்து சாரை சாரையாக வெளியேறினர்.
பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த விளம்பர திமுக அரசுக்கு, இதுவரை வாக்கறுதிகளை நிறைவேற்றாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்த விளம்பர திமுக அரசு, அதன்பின்னர் குறிப்பிட்ட மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கி வருகிறது. இதனால் தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அதிருப்பதியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனை ஆதரித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை திட்டம் குறித்து பேச ஆரம்பித்தார்.
இந்த திட்டம் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி, மகளிர் உரிமை தொகை பாதி பேருக்கு வந்துள்ளது - பாதி பேருக்கு வரவில்லை என்றுதானே நினைக்கிறீர்கள் என அங்கிருந்த பெண்களைப் பார்த்து கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குறைகள் இருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை கேட்டு கேட்டு மேலும் எரிச்சல் அடைந்த பெண்கள், அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தை விட்டு பாதியிலேயே கலைந்து சென்றனர்.
உண்மையை போட்டுடைத்த உதயநிதியால், கூட்டத்தில் இருந்த பெண்கள் சாரை சாரையாக வெளியேறியதை கண்டு திமுக நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதனை பொருட்படுத்தாத உதயநிதி ஸ்டாலின், ஆர்வ கோளாறில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஊரான கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஊரை கருங்கெண்டை சோழபுரம் என உளறி கொட்டினார்.
ஏற்கெனவே மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த பெண்கள், தந்தை மு.க. ஸ்டாலினை போன்றே மகன் உதயநிதியும் உளறி வருவதாக முணுமுணுத்தபடி சென்றனர்.